(ப.பன்னீர்செல்வம்)

இலங்கையின் சனத்தொகையை விட பன்மடங்கு பெருந் தொகையான சனத்தொகையுள்ள இந்தியாவில் எமது மக்களுக்கு தொழில்கள் கிடைப்பது என்பது "ஆச்சரியத்துக்குரிய " விடயமாகும் எனத் தெரிவத்துள்ள ஜாதிக ஹெல உறுமய,  இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் அரசு அவசரம் காட்டக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, 

அரச தரப்பில் சிலரது கொள்கைகளுக்காகவோ அல்லது கட்சிகளின் தேவைகளுக்காகவோ அல்லது தத்தமது வர்த்தக நடவடிக்கைகளுக்காவோ, அவர்களது தேவைகளுக்காகவோ, நாட்டை பாதிக்கும் விதத்திலான வெளிநாட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடுவதை கைவிட வேண்டும். 

 உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போது உள்நாட்டு தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள் அத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் தொழில்துறை சார்ந்தோர்  மற்றும்  சிவில் அமைப்புக்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இலங்கை உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 60 வீதமான சேவை வர்த்தகத்தை இந்தியாவுக்கு திறந்துவிடுவதால் அது எமது நாட்டுக்கு எவ்விதத்திலும் நன்மைகளை பெற்றுக் கொடுக்காது. அதைவிட எமது நாட்டை விட பன்மடங்கு சனத் தொகை அதிகமாகவுள்ள இந்தியாவில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும் என்பது ஆச்சரியத்துக்குரிய  கருத்தாகும். 

எனவே நாட்டுக்குள் குரல்களுக்கு செவி கொடுக்காமல் தன்னிச்சையாக வெளிநாடுகளுடன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டால் அது உள்நாட்டில் மக்களிடையே பெரும் எதிர்ப்புக்களை உருவாக்கும். 

2000 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் கையெழுத்திட முனைந்த சீபா உடன்படிக்கையும்,  1998 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க கையயெழுத்திட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையும் தோல்வி கண்டது குறிப்பிடதக்கதாகும்.