(இரோஷா வேலு )

இளைஞர்களின் தலைமைத்துவத்துடன் 2020 ஆம் ஆண்டல்ல 2030 ஆம் ஆண்டை தாண்டியும் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் தேசிய ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் நவீன் திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

நாட்டில் காணப்படும் பிரதான கட்சிகளுக்குள் ஜனநாயகம் மிக்க கட்சி ஐக்கிய தேசியக் கட்சியேயாகும். இதனாலேயே எமக்கான எதிர்கால பயணம் சவால் மிகுந்ததாக காணப்படுகின்றது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜபக்ஷக்களின் விருப்பங்களை நிறைவேற்றவே ஆட்சிக்கு வந்தனர். இவர்கள் எவ்வாறு தேசிய ஜனநாயகத்துக்காக குரல் கொடுப்பார்கள்.

எது எவ்வாறாயினும் இளைஞர்களின் புதிய தலைமையின் கீழ் 2020 அல்ல 2030 ஐ‍ தாண்டியும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கும் என்றார்.