மன்னாரில் தள்ளு வண்டியில் விற்கப்பட்ட  'பற்றீசில்' துருப்பிடித்த ஆணி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் உரிய ஆதாரங்களுடன் முறையிட்டும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மன்னார் செபஸ்ரியார் பேராலய பிரதான வீதியில் கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை இரவு தள்ளு வண்டியில் விற்கப்பட்ட உணவான பற்றீஸ்களை மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொள்வனவு செய்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

அன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் குறித்த பற்றீஸ்களை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.

இதன் போது கொள்வனவு செய்யப்பட்ட  'பற்றீஸ்' ஒன்றில் இருந்து துருப்பிடித்த ஆணி ஒன்று இருந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மறு நாள் 19 ஆம் திகதி ஆதாரம் மற்றும் எழுத்து மூலம் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பாதிக்கப்பட்டவர் செய்துள்ளார்.

முறைப்பாடு செய்தும்  இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என குறித்த நபர் விசனம் தெரிவிக்கின்றார்.

"என்னை அழைத்து எவ்வித விளக்கமும் கேட்கவில்லை" என தெரிவித்த குறித்த நபர் தொடர்ச்சியாக அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளும் பட்சத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும் எனவும், இதனால் மக்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.