(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

 அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியினர் 16 பேரை கொண்ட குழுவில் ஒருவருக்கு கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.

 என்றாலும் பிரிந்து சுயாதீனமாக செயற்படுவோர் அனைவருக்கும் அப்படி இடமளிக்க முடியாது. ஏனெனில் கூட்டு எதிரணியினர் இன்னும் சில நாட்களில் பல பிரிவாக பிளவு காணும் போது அவர்களுக்கும் இடமளிக்க வேண்டி வரும் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கணக்குகுழு, கோப்குழு மற்றும் அரச நிதிக்குழு ஆகியவற்றுக்கு பழைய உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்யப்படுவர் என எடுக்கப்பட்ட கட்சி தலைவர் கூட்டத்தின் தீர்மானம் தொடர்பில் பந்துல குணவர்தன எம்.பி முன்வைத்த வாதத்திற்கு பதிலளித்து உரையாற்றும் போது அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 பந்துல குணவர்தன எம்.பி தெரிவித்ததாவது,

கணக்கு குழு, கோப்குழு மற்றும் அரச நிதிக்குழு ஆகியவற்றுக்கு பழைய உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்யப்படுவர் என எடுக்கப்பட்ட கட்சி தலைவர் கூட்டத்தின் தீர்மானம் ஏற்புடையதல்ல என்றார்.

அநுர குமார திஸாநாயக்க தெரிவித்ததாவது,

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சரியான முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களை வந்து சேர்வதில்லை. ஆகவே இதற்கு உரிய வழி செய்ய வேண்டும். பழைய உறுப்பினர் தெரிவு செய்யப்படவில்லை.

ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களையே அந்த அந்த கட்சிகள் மீண்டும் புதிதாக தெரிவு செய்துள்ளன. அதுவே எடுக்கப்பட்ட தீர்மானமாகும். கட்சி தலைவர்கள் கூட்டத்தின் முடிவுகள் சரியான முறையில் வெளிவராதமையினால் காலை பொழுதில் சபையில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

அத்துடன் கட்சி தலைவர் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக நால்வர் வருகை தருகின்றனர். இதன்படி கூட்டு எதிரணி சார்பாக தினேஷ் குணவர்தன, அமைச்சர் சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க ஆகியோர் வருகை தருகின்றனர். ஆகவே கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறி 16 பேரை கொண்ட குழுவில் ஒருவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

இதன்போது காமினி லொக்குகே எம்.பி தெரிவித்ததாவது,

கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட குழுவினரே சமூகமளிக்கின்றனர். இது ஜனநாயகமல்ல. இந்த பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு தனி கட்சிகள் உள்ளன. அவர்களுக்கும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். சபாநாயகர் தனி தீர்மானம் எடுக்க முனைய கூடாது என்றார்.

ஆளும் கட்சி சார்பாக இதன்போது எழுந்து பேசிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த தெரிவித்ததாவது,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் 51 பேராகவும் 16 பேராகவும் நான்காக பிரிந்து உள்ளனர். வேண்டுமாயின் 6 பேர் பிரிந்து இன்னுமொரு குழுவும் உருவாகலாம். தற்போது கூட்டு எதிரணி பல பிரிவாக பிரிந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. இந்த தருவாயில் அனைவருக்கும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இடமளித்தால் பெரும் சிக்கலாக மாறும் என்றார்.

இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் பெரும் கோஷமிட்டு எம்மிடம் பிளவு இல்லை என்றனர்.