(ரி.விரூஷன்)

மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். ஆனால் தற்போது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லும் ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டு விட்டது என திருகோணமலை மேல்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.

முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்,

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை மேல் நீதிமன்றிலிருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு வந்தேன். அந்த வகையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  3 ஆண்டுகள் நான் சேவையாற்றுவதற்கு காரணமாகவிருந்த எமது முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபனுக்கு நன்றியைத் தெரிவித்தக் கொள்கின்றேன்.

அத்துடன் யாழில்  அநியாயங்கள் - அட்டூழியங்கள் அரங்கேறிய போது, தடுத்து நிறுத்தவேண்டிய கடப்பாடு நீதித்துறைக்கு இருந்தது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய குற்றங்களையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டேன். அதற்கு உதவி புரிந்த அனைவருக்கம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.