(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

 மத்திய வங்கி மோசடி தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்த போது அர்ஜூன அலோசியஸூடன் தொலைபேசியில் உரையாடியவர்களை மீண்டும் கோப் குழுவில் நியமிக்க கூடாது. அவ்வாறு நியமிப்பது ஒழுக்கவியலுக்கு முரணானது. ஆகவே சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்ட நபர்களை கோப் குழுவில் மீண்டும் நியமிக்காமல் நீக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் நேற்று சபையில் வலியுறுத்தின.

கோப் குழு உறுப்பினர்களின் தெரிவின் போது எனக்கு எந்தவித அழுத்தமும் பிரயோகிக்க முடியாது. அது என்னுடைய காரியமல்ல என சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

 பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விவகாரத்தை சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.

இதன்போது மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி தெரிவித்ததாவது,

புதிய சபை அமர்வின் போது கோப் குழுவிற்கு முன்பு இருந்த உறுப்பினர்களே தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நானும் அந்த குழுவில் உள்ளேன். என்றாலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை கோப் குழுவில் நடந்து கொண்டிருக்கும் போது கோப் குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர் குறித்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட அர்ஜூன் அலோசியஸூடன் தொடர்பினை ஏற்படுத்தி தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இந்த விடயம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் போது வெளிவந்தது. ஆகவே கோப்குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது தொலைபேசி உரையாடலுடன் சம்பந்தப்பட்டவர்களை இணைக்க கூடாது. அதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் உங்களது அவதானத்திற்கு கொண்டு வந்தேன். இந்த விடயம் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டதா என்றார்.

இதனையடுத்து பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய,

 ஆம். நீங்கள் குறிப்பிட்ட விடயம் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசேட அவதானம் தப்பட்டது. என்றாலும் கோப் குழு உறுப்பினர்களின் தெரிவின் போது எனக்கு எந்தவித அழுத்தமும் பிரயோகிக்க முடியாது. அது என்னுடைய காரியமல்ல என்றார்.

இதன்போது மீண்டும் தனது வாதத்தை முன்வைத்த மஹிந்தானந்த அளுத்கமகே கூறும் போது,

விசாரணையொன்று நடந்து கொண்டிருக்கும் போது அந்த செயற்பாட்டு முரணான முறையில் சம்பந்த குற்றவாளியுடன் தொலைபேசியில் உரையாடுவது பெரும் பிழையான விடயமாகும். ஆகவே இது தொடர்பில் உங்களுடை தீர்ப்பினை அறிவித்து உங்களது மதிப்பை காப்பாற்ற முயல வேண்டும். இல்லையேல் மக்கள் உரிய தீர்மானம் எடுப்பார்கள் என்றார்.

இதனையடுத்து எழுந்து பேசிய எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க,

கோப் குழுவில் மோசடியுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். என்றாலும் அந்த கட்டமைப்பினை மீறி நாம் இந்த விடயத்தை பார்க்க வேண்டும். 

ஏனெனில் கோப் குழுவின் மத்திய வங்கி மோசடி தொடர்பான விசாரணையொன்று நடந்து கொண்டிருக்கும் போது அதனை பொருட்படுத்தாமல் மோசடியுடன் சம்பந்தப்பட்ட அர்ஜூன அலோசியஸூடன் தொலைபேசியில் ஒரு சிலர் உரையாடியுள்ளனர். ஆகவே இது ஒழுக்கமான செயற்பாடு அல்ல. ஆகவே கோப் குழுவின் மீள் நியமனத்தின் போது இது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

கோப் குழுவுக்கு அங்கத்தவர்களை நியமிக்கும் போது என்னால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் சுட்டிக்காட்டி வாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.