(நா.தனுஜா)

தேசிய நீதி வாரத்தை முன்னிட்டு 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச சட்ட ஆலோசனை சேவை காலநிலை மாற்றத்தினை கருத்திற்கொண்டு பிற்போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யு.ஆர்.டி.சில்வா கேசரிக்கு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நிலவிவரும் மோசமான காலநிலையின் காரணமாக இருநாட்கள் நடத்துவதற்கு தீர்மானித்திருந்த இலவச சட்ட ஆலோசனை சேவைகள் பிற்போடப்பட்டுள்ளன. சட்டப்பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனை என்பது மக்களுக்கு அவசியமானதாகும். எனவே தற்போதைய மழை மற்றும் வெள்ளம் என்பவற்றுக்கு மத்தியில் மக்களால் ஆலோசனை சேவையினைப் பெறுவதற்கு வருவது இயலாத காரியமாகும். ஆகையினாலேயே இச்சேவையினை ஜூன் மாதமளவில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். 

வெள்ளம் காரணமாக அநேகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் சொத்துக்கள், உடமைகள் சேதமடைந்துள்ளன. வீட்டுறுதிப்பத்திரம், காணி உறுதிப்பத்திரம் போன்ற முக்கிய ஆவணங்கள் வெள்ளம் காரணமாக அழிவுற்றிருக்கக்கூடும். எனவே அவற்றை மீளப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய நீதி வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டம் தொடர்பில் மக்களை அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான விவாத போட்டிகள் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறும்.

மேலும் தாம் வாழும் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் முறையாக மேற்கொள்ளப்படாதிருப்பின் அவை தொடர்பிலும் மக்கள் சட்ட ஆலோசனையினை பெற்றுக்கொள்ள முடியும். மேற்படி விவகாரங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தல் மற்றும் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதற்கான வழிமுறை என்பவற்றை எம்மால் வழங்க முடியும். தேசிய நீதி வாரத்தினை முன்னிட்டு இவ்வாறான செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதன் மூலம் மக்களுக்கு சட்டம் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடிவதுடன், சட்டத்துறையில் மக்களின் ஈடுபாட்டை அதிகரிக்க முடியும் என்றார்.