(இரோஷா வேலு) 

குவைத் நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகநபர் ஒருவர் சுங்கத்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவிக்கையில்

குவைத்திலிருந்து நேற்று அதிகாலை 1.00 மணியளவில் இலங்கை வந்த குறித்த சந்தேகநபர் வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது கைப்பையில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்து கடத்த முயற்சிக்கையிலேயே இவ்வாறு சுங்க பிரிவின் பரிசோதனை அதிகாரிகளால் தடுத்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

இலங்கையைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு சந்தேக நபரை கைதுசெய்யும் வேளையில் அவரிடமிருந்து 30,000 சிகரெட்டுகளுடன் 150 சிகரெட் அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் இலங்கைப் பெறுமதி 1,500,000 ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபரை கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.