(எம்.எப்.எம்.பஸீர்)

அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களுள் 18542 குடும்பங்களைச் சேர்ந்த 84943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அம் மாவட்டங்களிலுள்ள மக்களின்  இயல்பு வாழ்க்கையும்  பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த  காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையும்  இன்று நண்பகல் வரை 13 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை அனர்த்தம் காரணமாக  18542 குடும்பங்களைச் சேர்ந்த 84943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் வெள்ளம், மண் சரிவு அபாயம் காரணமாக 7526 குடும்பங்களைச் சேர்ந்த 27621 பேரை 194 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான  வைத்திய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந் நிலையில் அனர்த்தம் காரணமாக  இதுவரை 29 வீடுகள் முற்றாகவும் 2527 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.  

அத்துடன் நில்வளா, கிங், களு, களனி, மகாவலி, ஆகிய கங்கைகளும், அத்தனகல்ல ஓயா, மா ஓயா, கட்டுபிட்டி ஓயா, ரத்தஒலா ஓயா, கலா ஓயா, தெதுரு ஓயா ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளதனால் குறித்த ஆறுகளுக்கு அருகில் உள்ளோர் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

மேலும் பல நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்து வரும் நிலையில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாட்க்களுக்கும் மழை நீடிக்குமானால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ச்சியாக திறக்கப்படலாம்.

எனவே அனர்த்த வலயங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை அப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றார்.