மண்டைதீவில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் உடனடியாகத்தொடர்புகொள்ளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மண்டைதீவின் நன்னீர் வளமுள்ள பகுதியில் சுமார் 18ஏக்கர் பரப்பளவில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர்களான மக்கள் பல இடங்களிலும் வசித்து வருகின்றனர்.

 இந்நிலையில் மேற்படி காணிகளை நிரந்தரமாக கைப்பற்ற இராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து மண்டைதீவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட வடமாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் அப்பகுதியின் கிராமசேவகர் மற்றும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், உரிமையாளர்களின் சரியான விபரங்கள் இன்மையால், உரிய உரிமையாளர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

இதுவரை 29 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மீதி யாராக இருப்பினும் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மண்டைதீவிலேயே மேற்படி பகுதியில் மட்டும் தான் நன்னீர் வளம் காணப்படுவதாகவும், அதனாலேயே இராணுவத்தினர் மேற்படி பொதுமக்களின் காணியை அபகரிக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மேற்படி காணிகளை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றும் பொருட்டு உரிமையாளர்கள் தம்மை உடனடியாகத்தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.