(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மற்றும் ருவாண்டாவிற்குமிடையில் பாதுகாப்பு துறையில் இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை நடைமுறைப்படுத்த பாதுகாப்பு அமைச்சுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ருவாண்டா நாட்டுடனான பாதுகாப்பு துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தம் எமது நாட்டின் பாதுகாப்பு துறையில் செயற்படுத்த வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் பரீசீலனைகளை மேற்கொள்ள கடந்த வாரம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன ருவாண்டா நாட்டிற்கு உத்தியோக பூர்வ அரச பயணத்தனை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பல எதிர்கால செயற்திட்டங்கள் மும்மொழியப்பட்டது. தற்போது எமது நாட்டில் நடைமுறையில் காணப்படுகின்ற பாதுகாப்பு திட்டங்களில் புதிய தொழினுட் முறைமைகளை உள்ளடக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ருவாண்டா நாட்டின் பாதுகாப்பு துறையில் காணப்படுகின்ற நவீன தொழினுட்ப உபாய முறைமைகள் அந்நாட்டு தேசிய நல பாதுகாப்பிற்கு பொருத்தமாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டில் இதுவரை காலமும் பின்பற்றி வருகின்ற தேசிய பாதுகாப்பு கொள்கை திட்டங்கள் மக்கள் மத்தியில் வேறுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு விடயத்தில் பல பிரச்சினைகள் கடந்த காலங்களில் தோற்றம் பெற்றுள்ளது.

ஆகவே இந்த அரசமுறை பயணத்தின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை எமது நாட்டு பாதுகாப்பு துறையிலும் செயற்படுத்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடுவது தொடர்பில் அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆகவே தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இரு நாட்டு பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு  தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை  ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் பாதுகாப்பு துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.