இந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது என  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. அமைப்பாளர்  தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நேற்று மாலை  கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பில் கட்சியின் மட்டு அமைப்பாளர்   இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

தமிழர்களுடைய நலன்கருதி இந்தியா செயற்படவில்லை அதேவேளை  தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை நிலைநிறுத்தி வல்லரசு என சீனாவுடன் போட்டியிடுவதற்காகவும் தங்களுடைய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்குமாக  தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது  என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு அமைப்பாளர்  தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய போராட்டம் என்பது கடந்த 70 வருடங்களாக எந்த தனி நல சுயநலத்திற்காக இந்த இனத்தை விற்று பிழைக்கின்ற எந்த ஒரு செயற்பாட்டிற்கும் எங்களுடைய போராட்டம் இருந்ததில்லை. அவ்வாறு இருந்ததனால் பலர் தங்களுடைய தண்டனைகளையும் அதற்குரிய பரிகாரங்களையும் கண்டது தான் எங்களுடைய தமிழ் மக்களுடைய கடந்தகால அரசியல் வரலாறாகவே இருக்கின்றது. 

எங்களுடைய போராட்டம் என்பது ஒரு புனிதமான போராட்டம் சிங்கள பேரினவாதம் எங்கள் மக்களை அடக்கி ஓடுக்கி வந்த காலப்பகுதியில் அவ்வப்போது மக்கள் எதிர்ப்பையும் தங்களுடைய அரசியல் அபிலாஷைகளையும் மிக வலிமையாக எதிர்த்து காட்டினார்கள். 

குறித்த காலப்பகுதியிலிருந்த அரசாங்கம் அந்த எதிர்ப்புகளை தங்களுடைய ஆதரவை முழுமையாக பயன்படுத்தி சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் பல கட்டங்களில் அடக்கி ஒடுக்கி வந்தார்கள்.  அந்த நிலைதான் முள்ளிவாய்க்கால் பேரவலம் வரைக்கும் வந்தது.

தமிழ் மக்கள் என்னத்துக்காக முள்ளிவாய்கால் வரை அந்த பேரவலத்தை சந்தித்தார்களே அந்த விடயம் ஒன்றும் இந்த புதிய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இவ்வாறான அரசியல் தலைவர்கள் அதற்காகத்தான் மக்கள் தமது உயிரை தியாகம் செய்தார்கள் என பொய்யான பிரச்சாரத்தை செய்து கொண்டுவருகின்றனர் இதனை மக்கள் சரியாக விளங்கி கொள்ளவேண்டும். 

நாங்கள் இது வரைகாலமும் எந்த சுயநிர்ணய தீர்வுக்காக போராடிவந்தோமே அந்த போராட்டத்தின் வெற்றிதான் முள்ளிவாய்கால் பேரவலம். எனவே இந்த பேரவலம் விடுதலைக்கான ஆரம்ப புள்ளியாக பார்க்க வேண்டும் .எனவே அந்த இடத்திலிருந்து எமது போரட்டம் புத்தியால்  போராடி பெற்றுக் கொள்ளவேண்டும்

 இலங்கை அரசுக்கு எதிரான பெரிய தரப்பு என்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமைதான். நாங்கள் எந்த விதத்திலும் சோரம்போகவில்லை விலைபோகவில்லை, தமிழ் தேசிய அரசியலில் எந்த நோக்கத்துக்காக முள்ளிவாய்கால் பேரவலம் ஏற்பட்டதோ அந்த நோக்கத்திற்காகவே அதனை இந்த உலகத்திற்கு சொல்லிவருகின்றோம் இந்த நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அடக்கி ஒடுக்கவதற்கு பலர் முயற்சிக்கின்றனர்.

 மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் இதுதான் இதனை அங்கிகரித்தால் மட்டும் தான் குறித்த தீவில் நிரந்தரமான அமைதியைப் பார்க்கலாம் என தெரிவித்து வருகின்றோம்.  எமது இனத்துக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டுவருகின்றது என்றார் .