(எம்.நஜிமுதீன்)

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கொண்டுவரப்பட்டுள்ளதால் எட்கா உடன்படிக்கை அவசியமில்லை. ஏனென்றால் எட்காவில் குறிப்பிட்டுள்ள விடயங்களை சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையின் மூலமாக நடைமுறைப்படுத்த முடியும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் பொருளாதாரம் ஐம்பது சதவீதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் பெறுமானம் 22 சதவீதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. வட்டி சதவீதம் 55 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று நாட்டில் சர்வதேசத்தின் தேவைகளுக்காக பொருளாதாரம் சீர்குலைக்கப்பபட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் சிங்கப்பூருடன் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதால் எட்கா உடன்படிக்கை அவசியப்படப் போவதில்லை. எட்கா உடன்படிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதிலுள்ள விடயங்களை வேறு வழிகளில் நடைமுறைப்படுத்துவற்கே சிங்கப்பூர் நாட்டுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளனர்.

எனவே எட்காவில் குறிப்பிட்டுள்ள விடயங்களை சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையின் மூலமாக நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.