தூத்துக்குடியில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு ரூபா 10 இலட்சம் நிவாரணமாக வழங்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் நிறுவப்பட்டுள்ள  ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். அந்த வகையில் அவர்களது போராட்டத்தின் 100 ஆவது நாளான இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.

இதன்போது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரு பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு.10 லட்சம் ரூபா நிவாரணத் தொகையாக வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்தோடு படுகாயமடைந்தோருக்கு ரூபா .3 லட்சமும், சிறிய காயங்களுக்கு உள்ளானோருக்கு ரூ.1 லட்சமும், நிவாரணமாக வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.