கிளிநொச்சி மாவட்டத்தில் 50  மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் மாதிரி வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி  மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளின்றி வாழ்கின்றன. இவர்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படுவதுடன் அடிப்படை பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் வடக்கில் நாம் 69 மாதிரிக் கிராமங்களை பொது மக்களுக்கு கையளித்திருக்கின்றோம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வடக்கில் 49 மாதிரிக்கிராமங்களை அமைத்தோம். இது இந்த ஆண்டில் 173 ஆக உயர்வடைந்திருக்கின்றது. அத்தோடு கிளிநொச்சியில் 14 மாதிரிக்கிராமங்களை அமைத்திருந்தோம். எனினும் இதனை 50 ஆக உயர்த்துவதற்கும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.