தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்

Published By: Priyatharshan

22 May, 2018 | 12:53 PM
image

உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செயன்முறையை வகுக்கவேண்டியது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டியிருக்கின்ற நிலைமாறுகால நீதிச் செயன்முறைகளில் முக்கியமானவற்றில் ஒன்றாகும். 

கணாமல்போனோர் விவகார அலுவலகத்தை நிறுவுவதற்காக சட்டமொன்றை ஏற்கெனவே நிறைவேற்றி அதன் பிரகாரம் அந்த அலுவலகத்தைச்  செயற்படவைத்திருக்கும் அரசாங்கம் இழப்பீட்டுச் சட்டமூலத்தை வரையும் பணிகளையும் பூர்த்தி செய்திருக்கிறது. அமைச்சரவையின் மார்ச் மாதத் தீர்மானம் ஒன்றையடுத்து சட்டவரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த வரைவு கடந்தவாரம் பகிரங்கத்துக்கு வந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மூலமாக இழப்பீட்டு அலுவலகத்தை அமைப்பதற்கு வகைசெய்யும்  சட்டமூலத்தை வரையும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகள் காண்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதற்குப் பிறகு இருமாதங்கள் கடந்த பின்னரும் அத்தகைய சட்டமூலம் பற்றிய விபரம் எதையும் அறியக்கூடியதாக இருக்கவில்லை.

மன்னாரைத் தளமாகக்கொண்டியங்கும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரான ஷிறீன் சரூரினால் தகவல் பெறுவதற்கான உரிமை ஆணைக்குழுவுக்குச் செய்யப்பட்ட விண்ணப்பம் ஒன்றையடுத்து பிரதமரின் அலுவலகம் இழப்பீட்டு சட்டமூல வரைவை அது தொடர்பில் முன்னதாக அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜருடன் சேர்த்து கடந்தவாரம் வெளியிட்டிருக்கிறது.

முதலில் ஷிறீன் சரூர் சட்டமூல வரைவையும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுடன் தொர்புடைய ஆவணங்களையும் தருமாறு பிரதமரின் அலுவலகத்திடமே விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அவற்றை வழங்குவதற்கு பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. அதையடுத்து அந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு விண்ணப்பம் செய்ததன் விளைவாக சட்டமூல வரைவின் பிரதியைப் பெறக்கூடியதாக இருந்திருக்கிறது.

ஆணைக்குழுவில் கடந்தவாரம் நடைபெற்ற விசாரணையின்போது சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சட்டவாதி தன்னிடம் சட்டமூல வரைவைத் தந்ததாக ஷிறீனா சரூர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் சிவில் சமூகம் பெறக்கூடிய பயன்களுக்கு ஒரு சிறப்பான உதாரணமாக இது அமைந்திருக்கிறது. 2015 செப்டெம்பர் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு இணங்க அரசாங்கம் அமைக்க உறுதியளித்த ஏனைய நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள், குறிப்பாக உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கான விசேட நீதிமன்றம், உண்மை ஆணைக்குழு ஆகியவை தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய செயன்முறைகள் பற்றிய வரைவுகளையும் பெற்றுக்கொள்வதற்காக சரூர் இந்த ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் செய்திருக்கிறார்.

இழப்பீட்டு அலுவலகச் சட்டமூல வரைவில் உள்ள விபரங்களின் அடிப்படையில் நோக்குகையில் ( 1) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின்போது, அவற்றின் விளைவாக அல்லது அவற்றுடன் தொடர்புடைய முறையில் (2) அரசியல் அமைதியின்மை அல்லது சிவில் குழப்பநிலையின்போது (3)திட்டமிடப்பட்டமுறையில் செய்யப்பட்டிருக்கக்கூடிய படுமோசமான உரிமை மீறல்களில்  தனிப்பட்டவர்களாக அல்லது குழுவாக அல்லது சமூகமாக (4) அடாத்தாகக் காணாமல் செய்யப்படுவதிலிருந்து சகல பிரஜைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான சர்வதேச சாசனத்துக்கு முரணாக ஆட்கள் காணாமல் செய்யப்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான செயன்முறைகளை முன்னெடுப்பதே இழப்பீட்டு அலுவலகத்தின் கடமையாகும். மேற்கூறப்பட்ட சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இலங்கையர்கள் ( பொலிசார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தவர்கள் , எல்லைக் கிராமங்களில் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்தவர்கள் உட்பட) இன, மத பாகுபாடு எதுவுமின்றி நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து இழப்பீட்டுக்கான விண்ணப்பங்களை செய்வதற்கு வசதி செய்யுமுகமாகவே இழப்பீட்டு அலுவலகம் அமைக்கப்படுகிறது என்று வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர்ச்சியாக அதுவும் குறிப்பாக ' றேப்பியா' ( ஆட்கள், சொத்துக்கள் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அதிகார சபை ) அமைக்கப்பட்டதற்குப் பிறகு இழப்பீடுகளை வழங்கிவந்திருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு காணி, வீடுகள் வழங்கல் என்று பல்வேறு வகையான இழப்பீடுகள் வழங்கல் செயன்முறைகள் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும் அக்கறைகளையும் முழுமையான கவனத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் இழப்பீடுகளை வழங்கும் ஒரு கொள்கையோ அல்லது இழப்பீடுகளை வழங்கும் செயன்முறைகளை ஒருங்கிணைக்கின்ற திட்டமோ இலங்கையில் இல்லை. அத்துடன் 'இழப்பீடு ' பிரத்தியேகமாக  என்று வகைப்படுத்தப்பட்ட உதவி வழங்கல் திட்டம் எதுவும் கூட இலங்கையில் இல்லை என்று இழப்பீட்டு அலுவலக சட்டமூலத்தை வரைவதற்கு அங்கீகாரத்தைப் பெறுவதற்காக பிரதமர் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது புதிய சட்ட மூல யோசனையின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது.

இழப்பீட்டு அலுவலக சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமானால் 1987 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க 'றேப்பியா' சட்டம் செயலிழந்துபோகும். றேப்பியாவினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளை உத்தேச புதிய அலுவலகமே பொறுப்பேற்கும். இழப்பீட்டுக்கான தெளிவான கொள்கையையும் நாடளாவிய ரீதியிலான  முழு அளவிலான அணுகுமுறையொன்றையும் அலுவலகம் வகுக்கும்.

(1) இழப்பீட்டுக்கு தகுதியுடையவர்ளையும் அவர்களின் தேவைகளின் மட்டங்களையும் அடையாளம் காணுதல்

 (2) அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அல்லது முன்னர் முன்னெடுக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டங்கள் பற்றிய தகவல்களை ஆராய்தல்

 (3) படுமோசமான மனித உரிமை மீறல்கள் அல்லது மனிதாபிமான உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக அல்லது கூட்டாக இழப்பீடுகளை வழங்குவதற்கான கொள்கைகளை வகுத்து அமைச்சரவைக்கு சிபாரிசு செய்தல் 

(4) அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு இழப்பீட்டுக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் அல்லது நடைமுறைப்படுத்தலுக்கு வசதி செய்வது 

(5) இழப்பீட்டுக்கு தகுதியானவர்களுக்கு அவற்றை வழங்குவதற்கு பயன்படுத்துவதற்கான நிதியைக் கையாளுதல் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியைக் கையாளுதல்

(6) வன்முறைகளும் மோதல்களும் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்கும் நல்லிணக்கத்துக்குமான ஏனைய பொறிமுறைகளுடன் இழப்பீட்டு அலுவலகத்தை தொர்புபடுத்தி அவற்றின் ஒத்தியல்பை உறுதிசெய்தல் 

(7)தகுதியானவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படுகின்ற செயற்பாடுகளின் முன்னேற்றத்தை கண்காணித்து மதிப்பீடு செய்தல் ஆகியவைஇழப்பீட்டு அலுவலகத்தின் இலக்குகள் என்று வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இழப்பீட்டு அலுவலகம் அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற 5 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அந்த உறுப்பினர்களில் ஒருவர் அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் அலுவலகத்தின் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். இழப்பீட்டு அலுவலகத்தின் உறுப்பினர்கள் அல்லாத வேறு மூன்று பேரை வெளியில் இருந்து அரசியலமைப்பு பேரவை சிபாரிசு செய்து அவர்களில் ஒருவரை அலுவலகத்தின் தலைவராக நியமிக்குமாறும் ஜனாதிபதியிடம் கேட்பதற்கான ஏற்பாடும் வரைவில் இருக்கிறது. உறுப்பினர்கள் நியமிக்கப்படும்போது பால்நிலை உட்பட  இலங்கைச் சமூகத்தின் பன்முகத்தன்மையை அந்த நியமனம் பிரதிபலிப்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும். அலுவலகத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 வருடங்களாகும். தகுதியீனம் காணப்பட்டால் உறுப்பினர்களில் எவரையும் ஜனாதிபதி பதவி நீக்கமுடியும்.

இழப்பீட்டு அலுவலகத்தின் தலைமை அலுவலகம் கொழும்பில் அமையும். தேவைகளுக்கு ஏற்ப பிராந்திய அலுவலகங்களும் தற்காலிகமான அல்லது நடமாடும் அலுவலகங்களும் அமைக்கப்படமுடியும் .தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நோக்கங்களுக்காக இந்த அலுவலகத்தின் உறுப்பினர்களில் ஒருவர் தகவல் அதிகாரியாக நியமிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக காணாமல்போனோர் விவகார அலுவலகத்துடனும் மற்றும் அந்த விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் இழப்பீட்டு அலுவலகம் ஒருங்கிணைந்து செயற்படும். இந்த அலுவலகத்தின் விவகாரங்களை நிருவகிக்க செயலகம் ஒன்று அமைக்கப்படும். அலுவலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகச் செயற்படுவதற்குரிய பொறுப்புடன் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படுவார்.

இந்தச் சட்டவரைவு பாதிக்கப்பட்டவர்ளின் ' உறவினர்கள் ' என்று பின்வருவோரை வகைப்படுத்துகிறது;

(1) வாழ்க்கைத்துணை அல்லது சேர்ந்து வாழ்பவர்.

(2) பிள்ளைகள்

(3) பெற்றோர் ( வளர்ப்புத தாய் , வளர்ப்புத் தந்தை உட்பட)

(4) சகோதரர்கள் அல்லது தாய் அல்லது தந்தையை ஒரே ஆளாகக்கொண்ட சகோதரர்கள் , தத்தெடுத்த சகோதரர்கள்

(5) கணவனின் அல்லது மனைவியின் தாய்தந்தையர்/ சட்டவழியிலான சகோதரர்கள்

(6) பேரப்பிள்ளைகள் மற்றும் பேரர் பேத்தியர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04