ஹவாய் தீவின் கிலாயூயா எரிமலையின் சீற்றம் காரணமாக வெளியாகிவரும் எரிமலை குழம்பு  புவிவெப்ப மின் உற்பத்தி ஆலையை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியீட்டை தடுக்கும் வகையில் அங்குள்ள மின் உற்பத்தி நிலையமொன்றை மூடுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் செயற்பாட்டிலுள்ள எரிமலைகளில் நூற்றாண்டுகளில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள எரிமலை வெடிப்பாக இது அமைந்துள்ளதாக புவியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிலாயூயா எரிமலையிலிருந்து வெளியாகிவரும் எரிமலை குழம்பு அண்மையில் குறித்த மின் உற்பத்தி ஆலையிலிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள ஹவாயின் பிரதான 137 நெடுஞ்சாலையை கடந்து கடலுடன் கலந்திருந்தது. இதனால் அங்கு அமில வாயு வெளியாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிமலை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கான முக்கிய பாதைகளில் ஒன்றாக இந்த 137 நெடுஞ்சாலை விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிலாயூயா எரிமலையில் கடந்த 4ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள சுமார் 30 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 2000ற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளதுடன், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.