ஐ.பி.எல் போட்டியில் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இடம்பெற்ற இக்கட்டான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதிய நடப்பு சம்பியன்ஸ் அணியான  மும்பை இந்தியன்ஸ் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.

இந் நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட டெல்லி அணி இந்த வெற்றியானது ஆறுதலை அளித்தது மட்டுமல்லாது மும்பை இந்தியன்ஸ் அணியின் கொண்டாட்டத்தையும் சீர்குலைத்து.

இதனிடையே மும்பை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் நாண சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 174 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி அணியின் சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரீஷப் பந்த் 44 பந்துகளை எதிர்கொண்டு தலா 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களடங்களாக 64 ஓட்டங்களை பெற்றார்.

175 என்ற இலக்கை நோக்கி களத்தில் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 19.3 ஓவர்களில் 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இந் நிலையில் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பினை ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தக்க வைத்துக் கொண்டன.