கடந்த வாரம் ( மே 14 ) ஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக காசா பள்ளத்தாக்கில் இடம்பெற்ற வன்முறை தூதரகத்தை டெல் அவீவிலிருந்து சர்ச்சைக்குரிய நகருக்கு மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்தினால் ஏற்படக்கூடிய பயங்கரமான விளைவுகளை உலகிற்கு மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்தியிருக்கிறது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு ட்ரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரக இடமாற்றம் குறித்து அறிவித்தபோது அவரின் அந்தத் தீர்மானம் பாலஸ்தீனப் பிராந்தியங்களில் வன்முறையை மூளச்செய்யும் என்பதுடன் எந்தவொரு சமாதான முயற்சியையும் சிக்கலாக்கும் என்று பலரும் எச்சரிக்கை செய்தார்கள்.

பல வருடங்களாக இஸ்ரேலினதும் எகிப்தினதும் முற்றுகையினால் திணறிக்கொண்டிருக்கும் காசா பள்ளத்தாக்கில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலுடனான எல்லைக்கு விரைந்து ஆர்ப்பாட்டம் செய்யுமாறு பாலஸ்தீனர்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. எல்லையில் இஸ்ரேலியப் படையினர் பாலஸ்தீன மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். 2014 ஆண்டில் காசாவை இஸ்ரேல் தாக்கியதற்குப் பின்னரான காலகட்டத்தில் அங்கு இடம்பெற்றிருக்கக்கூடிய படுமோசமான வன்முறையாக இது அமைந்தது. தூதரக இடமாற்றமும் காசா எல்லையில் ஈவிரக்கமற்றமுறையில் இஸ்ரேலியப் படைகள் நடத்தியிருக்கும் தாக்குதலும் ' நாக்பா ' ( அனர்த்தம்) வின் 70 ஆவது வருடாந்த தினத்துக்கு முன்னதாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 1948 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்களது சொந்த மண்ணில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தினத்தையே அவர்கள் அனர்த்த தினம் என்று அழைக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களாக காசா எரிந்துகொண்டிருக்கிறது. திங்கட்கிழமைச் சம்பவத்துக்கு முன்னதாக ஏற்கெனவே பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களைக கையாளுவதில் இஸ்ரேல்  காட்டுகின்ற கொடூரத்தனம் டெல் அவீவும் சர்வதேச சமூகமும் பாலஸ்தீனர்களின் உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்ற உண்மையை வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது.

 

காசா வன்முறை இடம்பெற்ற கையோடு அமெரிக்கத் தூதரக திறப்புவிழாவில் உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு பாலஸ்தீனர்களின் மரணங்கள் தொடர்பில் எந்தவிதத்திலும் வருத்தத்தை வெளிக்காட்டவில்லை. பதிலாக அன்றைய தினத்தை பேருவகை தருகின்ற - கீர்த்தி வாய்ந்த தினம் என்று வர்ணித்தார். அதேவேளை, ட்ரம்பின் மருமகனும் ஆலோசகருமான ஜெராட் குஷ்னர் " வன்முறையைத் தூண்டிவிடுபவர்கள் பிரச்சினையின் ஒரு அங்கமே தவிர, தீர்வின் அங்கமல்ல" என்று ஆர்ப்பார்ட்டக்காரர்களைப் பற்றி தனது உரையில் குறிப்பிட்டார்.

 

சமாதான முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கு அர்த்தபுஷ்டியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பதே உண்மையான பிரச்சினையாகும். வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஆக்கிரமிப்புப் பிராந்தியங்களில் அரசியல் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கும் ஒரேவழி சமாதான முயற்சிகளேயாகும். ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்த சமாதானத் திட்டத்தை முன்னெடுப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவீவில் இருந்து ஜெருசலேத்துக்கு இடமாற்றுவதற்கு அவர் எடுத்த முடிவு நெருக்கடியை மேலும் மோசமாக்குவதற்கு மாத்திரமே வழிவகுத்திருக்கிறது.ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகர் என்று பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான இறுதித் தீர்வின் அங்கமாகவே ஜெருசலேம் நோக்கப்படுகிறது. அந்த நகர் முழுவதுமே இப்போது  இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற போதிலும் , பாலஸ்தீனர்கள் பழைய நகரம் உட்பட கிழக்கு ஜெருசலேத்தை தங்களது தலைநகர் என்று உரிமைகோருகிறார்கள். அவர்கள் இப்போது வன்முறைச் சக்கரத்திற்குள் அகப்பட்டிருக்கிறார்கள்.

வெளியுலகம் திரும்பத்திரும்ப உறுழொழிகளை அளிக்கின்ற போதிலும் , இதுகாறும் உள்ள நிலைமையிலேயே -  அதாவது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழான மேற்கு ஆற்றங்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் , முற்றுகைக்குள்ளான காசா பள்ளத்தாக்கு - பாலஸ்தீனர்கள் வாழவேண்டியிருக்கிறது. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகர் என்று ட்ரம்ப் அங்கீகரித்திருப்பதை அடுத்து, தங்களுக்கு பாதகமாக அமையக்கூடிய வகையில் களநிலைமைகள் அங்கு மாற்றியமைக்கப்படும் என்று பாலஸ்தீனர்கள் அஞ்சுகிறார்கள். சர்வதேச சமூகம் தொடர்ந்து மௌனம் சாதிக்கக்கூடாது. காசா எல்லையில் நடந்தபடுகொலைகள் தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்படவேண்டும்.

வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்