முள்ளிவாயக்கால் விடயத்திற்கு தற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தை நாங்கள் நம்ப முடியாது. எமக்கான தீர்வையும் இந்த இனப்படுகொலைக்கான நீதியையும் சர்வதேசமே எமக்குத் பெற்றுத் தரவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளவாய்க்காலிலே ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மற்றும் 50 ஆயிரத்துக்கும்   மேற்பட்ட வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் 09 ஆம் ஆண்டு இனப்படுகொலை நாளை நாம் தொடர்ச்சியாக  மட்டு. மாவட்டத்தில் அனுஷ்டித்து வருகின்றோம். 

இந் நிலையில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக நல்லிணக்கம் என்று கூறிக் கொண்டே இருக்கின்றதே தவிற எமக்கான தீர்வையும் நீதியையும் இதுவரை பெற்றுத் தரவில்லை.

இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் சர்வதேச ரீதியில் செல்கின்றது. இந் நேரத்தில் சர்வதேச சமூகத்திடம் நாம் விடுக்கும் வேண்டுகோள் யாதெனில் இலங்கை அரசாங்கத்தை எம்மால் நம்ப முடியாது, எனவே எமக்கான தீர்வையும் இந்த படுகொலைகளுக்கான நீதியையும் சர்வதேசமே எமக்கு பெற்றுத் தர வேண்டும் என்றார்.