ஆழமான காயங்களைக் குணப்படுத்துவதற்கு 9 வருட காலம் போதுமானதாக இல்லாதிருக்கலாம், ஆனால் உள்நோக்கிச் சிந்திக்க ஆரம்பிப்பதற்கு அது போதுமானதாகும்.என்றாலும், இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவின் வருடாந்த தினத்தைச் சூழ்ந்திருக்கும் எதிரரெதிர்க் கருதத்துப்பாங்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அத்தகைய உள்நோக்குச் சிந்தனைக்கான அறிகுறிகள் அரிதாகவே இருக்கின்றன.

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குழுமிய தமிழர்களைப் பொறுத்தவரை, அது ( 2009 மே 19 முடிவடைந்த ) போரின் கொடூரமான அந்தக் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நினைவஞ்சலி செய்வதற்கான தினமாகும்.சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு தெரிவிக்கிறது. மறுபுறத்தில் தென்னிலங்கைச் சிங்கள அரசியல் தலைமைத்துவம் அன்றைய தினத்தையும் அடுத்தடுத்த தினங்களையும் ' போர் வெற்றி நாயகர்களை 'நினைவுகூர்ந்து அமைதியைக்கொண்டுவருவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைக் கொண்டாடுவதற்குப் பயன்படுத்திவருகிறது. இந்த வருடமும் கூட  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட தேசியத் தலைவர்கள் படைவீரர்களின் தியாகங்களை  நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தியிருக்கிறார்கள். அதேவேளை, போரில் அகப்பட்டுப் பலியான குடிமக்கள் குறித்து எதுவும் கூறவில்லை.

அடிவேதனையையும் வெற்றிப் பெருமிதத்தையும் பற்றிய இந்த முற்றிலும் வெவ்வேறான எடுத்துரைப்புகள் ஒருபோதும் ஒரு புள்ளியில் சந்திக்கமுடியாதவையாகும். அத்தகையதொரு பின்னணியில், பயனுறுதியுடைய முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான வாய்ப்புகளும் மிக அருகலாகவே இருந்துவருகின்றன. மேலும் காலம் செல்லச்செல்ல (போரின் முடிவையும் தாண்டி நிலைத்திருக்கின்ற )இனப்பிளவைத் தீர்த்துவைப்பது என்பது இரு சமூகங்களுக்கும் மேலும் கடுமையானதாகவே போய்விடும்.

2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதாக உறுதியளித்தது. தமிழர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்படசகல மாகாணங்களுக்கும் கூடுதலான அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கு வழிவகுக்கக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான செயன்முறைகளைப் புதிய அரசாங்கம் முன்னெடுத்தது. ஆளும் கூட்டணிக்குள் தொடருகின்ற முரண்பாடுகளில் கவனம் முழுவதையும் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளான நிலையில் அரசாங்கத் தலைமைத்துவத்தினால் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை உறுதிப்பாடான வேகத்தில் முன்னெடுக்கமுடியவில்லை.போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவம் கையகப்படுத்தியிருக்கும் குடிமக்களின் காணிகளை விடுவித்தல் அல்லது காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் என்பன போன்று  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் கூட ( நிலைபேறான அரசியல் தீர்வொன்று இல்லாத சூழ்நிலையில் ) மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மக்களின் கவனத்தைப் பெறக்கூடியவையாக அல்லது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அமையும்.

தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஏனைய பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் முனைப்புடன் இறங்கும் என்ற நம்பிக்கையில் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அதன் மீது நெருக்குதல் பிரயோகிக்காமல் சர்வதேச சமூகம் விட்டுவிட்டது.அரசியல் முனையில்தான் முன்முயற்சிகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்துவிட்டன என்று பார்த்தால் , பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளும் கூட நம்பிக்கையூட்டுவனவாக இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் அனேகமாக ஒவ்வொரு குடும்பமும் கழுத்தளவுக்கு கடனில் மூழ்கிக்கிடக்கின்றன. இளைஞர் ,யுவதிகள் வேலைவாய்ப்புக் கிடைக்காமல் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்கள். காலம் கடந்துபோய்க்கொண்டிருக்கிறது.

போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது கடந்த காலதத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு அவர்கள் எதிர்நோக்குகின்ற தற்போதைய சவால்களைச் சமாளிப்பதற்கு உதவுவது ஒரு வழி. அவர்களை மிரட்டுகின்ற நினைவுகள் ஒருபோதுமே அகலாமல் இருக்கக்கூடும். ஆனால், அந்த மக்கள்  தங்களுக்கு நல்லதொரு எதிர்காலம் கிட்டுமென்ற நம்பிக்கை ஏற்படக்கூடியதாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் காயங்களைக் குணப்படுத்துவது ஓரளவுக்குச் சாத்தியமாகக்கூடும். தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் அவர்களைக் கைவிடக்கூடாது. தவறவிடப்பட்ட வாய்ப்புக்களின் பட்டியல் நீளக்கூடாது.

(  த இந்து (ஆங்கிலம்) ஆசிரிய தலையங்கம் 19 மே 2018)