சில ஊடகங்களும் இனவாத அமைப்புக்களும் தவறாக குறிப்பிடுவதைப் போன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளிலும் எமது பாதுகாப்பு படையினர் மீது யுத்தக் குற்றங்கள் சுமத்தப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் எதிரான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சார்பானவர்களே இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று (19) பிற்பகல் பாராளுமன்ற விளையாட்டரங்கிலுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்ற தேசிய இராணுவ தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இராணுவத்தினரையும் தீவிரவாதிகளையும் சிலர் சரியாக இனங்கண்டு கொள்ளாமை கவலைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்தார்.

சில அரசியல்வாதிகளுக்கும் பணத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் கூட இன்று இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான வேறுபாட்டை சரிவர புரிந்துகொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எமது சிந்தனைகள், தேசத்தின் அடையாளங்கள், மரபுரிமைகள், பண்பாடு என்பவற்றுடன் நாட்டினதும் மக்களினதும் இராணுவத்தினரதும் கௌரவத்தை பேணும் வகையில் சகலரும் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரம்மிக்க இராணுவத்தினருக்கு என்றும் தேசத்தின் மரியாதை உரித்தானது என்பதுடன், இராணுவத்தினருக்கு வழங்கக்கூடிய உயரிய கௌரவத்தையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி தேவைகளை நிறைவேற்றவும் அரசாங்கம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

சில அரச ஊடகங்களும் இன்று இராணுவத்தினரை கௌரவிக்க மறந்து போயுள்ளதுடன், சில தனியார் ஊடக நிறுவனங்களும் தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரின் நன்மைக்காக மேற்கொள்ளும் செயற்திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடாமை கவலைக்குரியதாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். உயிர்த்தியாகம் செய்து தாய் நாட்டிற்காக இராணுவத்தினர் செய்த அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அவர்களுக்கு கௌரவத்தினை வழங்க வேண்டியது சகலரதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாக செயற்படக்கூடாது என்பதுடன், அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவோ அதிகாரத்தை பெற்றுள்ள அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்லது அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவோ இராணுவத்தினரை உபயோகிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

மிலேச்சத்தனமான தீவிரவாத யுத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த எண்ணங்கள் இன்னும் முற்றாக இல்லாதொழிக்கப்படவில்லை என்பதுடன், நாட்டிற்கு வெளியே இன்றும் தனியான ஈழ நாடு பற்றிய கனவினைக் கொண்டுள்ள இனவாதிகள் காணப்படுவதுடன் அவர்களது அந்த கனவு நிறைவேற ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த மூன்றரை வருட காலத்தினுள் அரசாங்கம் தனது நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணங்களை தோற்கடிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தீவிரவாதத்தை தோற்கடித்து இலங்கை மக்களுக்கு சுதந்திரமான தேசத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக போர்க்களத்தில் யுத்தம் புரிந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் முகமாக வருடாந்தம் இடம்பெறும் இராணுவ தின நிகழ்வுகள் இன்றும் மிகுந்த அபிமானமான முறையில் இடம்பெற்றன.

இராணுவ நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த சகல இராணுவத்தினருக்கும் மரியாதை செலுத்தினார்.