பெல்ஜியத்தின் தெற்கு பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் சென்று கொண்டிருந்த வானை துரத்திப்பிடித்த அதிகாரிகள் அதிலிருந்து இரண்டு வயது சிறுமியை பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர்.

எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்த சிறுமி காயங்கள் காரணமாக மரணித்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெல்ஜியத்தின் நமூர் என்ற நகரிற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட வானை பொலிஸார் துரத்திப்பிடித்துள்ளனர்.

எனினும் பொலிஸாரிடம் பிடிபடாமல் வான்சாரதி வாகனத்தை பல கிலோமீற்றர் தூரம் துரத்திச்சென்றார் எனவும் பின்னர்இன்னொரு வாகனத்துடன் இந்த வான் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரை நெருங்கிவராமல் செய்வதற்காக சிறுமியை சிலர் வாகனத்திற்கு வெளியே தூக்கி பிடித்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வானிற்குள் மூன்று குழந்தைகள் உட்பட 29 பேர் காணப்பட்டனர் இவர்கள் அனைவரும் குர்திஸ் இனத்தை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இது சட்டவிரோத குடியேற்ற வாசிகளை கடத்தும் முயற்சி என பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.