(ஆர்.யசி )

வடக்கின் ஜனநாயக செயற்பாடுகள் அனைத்தையும் சீரழித்து யுத்தம் ஒன்றை உருவாக்கியது  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக்  கொண்டு செயற்பட்ட அரசாங்கமேயாகும். யுத்தத்தை முடித்ததாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம் வடக்கின் அழிவுகளுக்கு பதில் கூற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

நிறைவேற்று ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கப்படும் சர்வாதிகார நகர்வுகள் துண்டிக்கப்பட வேண்டும் அத்துடன் தனி ஒரு இடத்தில்  குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இன்று அமைச்சரவையில் சர்வாதிகாரம் குவிந்து கிடக்கின்றது. இதனால் முழுமையான அதிகார துஷ்பிரயோகமே அமைச்சரவையில் இடம்பெறுகின்றது.

நாட்டில் யுத்தம் ஒன்று உருவாகுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையே காரணமாக அமைந்தது. வடக்கில் ஜனநாயக ரீதியாக நடைபெறவிருந்த தேர்தலைக் கூட நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் மூலமாக தடுத்தனர்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் எவ்வாறு தலை தூக்கியது. அப்போது ஜே. ஆர் ஆட்சிக்கு எதிரான அழுத்தங்கள் எழுந்து நெருக்கடிகள் அனைத்திற்கும் பதில் கூறக்கூடிய நிலைமை இருக்கவில்லை. அவர்களுக்கு எதிராக இடதுசாரி சக்திகள் முன்னோக்கி பயணித்துக்கொண்டு இருந்தது. ஆகவே அவருக்கு எதிரான நெருக்கடிகளை வேறு திசைக்கு திருப்ப வேண்டிய தேவை ஜே.ஆருக்கு தேவைப்பட்டது. 

அதற்காகவே அன்று கறுப்பு ஜூலை கலவரத்தை அரசாங்கம் கையாண்டது. இவைகளே இலங்கையில் யுத்தம் ஒன்று உருவாக பிரதான காரணியாக அமைந்தது. 1981-1983 காலம் வடக்கில் தமிழ் மக்கள் வேறு வழியில்லாது ஆயுதத்தை கையில் ஏந்தவேண்டிய நிலை உருவானது தமது கண் முன்னே அவர்களின் உறவுகளை கொன்று, கொடுமைப்படுத்தியமை. டயர் கொண்டு பொதுமக்களை எரித்தமை அத்துடன் யாழ் மக்களின் இதயமாக இருந்த நூலகத்தை தீக்கிரையாக்கியமை போன்ற பல சம்பவங்கள் இன்றும் எம் கண்முன்னே வந்து போகின்றது. 

ஆகவே யுத்தத்தை வெற்றிகொண்டதாக மார்தட்டிக்கொள்ளும் சிங்கள தலைவர்களே இந்த நாட்டில் யுத்தம் ஒன்றினை உருவாக்கினர். அதற்கு பிரதான காரணம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையாகும் என்றார்.