காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையிலான நகர சபை உறுப்பினர்கள் மற்றும் நகர சபை உத்தியோகத்தர் அடங்கிய குழுவினர் திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் சிங்கப்பூரின் முன்மாதிரியை அறிந்து கொள்ளும் களக் கற்கையில் பங்கேற்றுள்ளனர்.

 “ஷீரோ வேஸ்ட் மனேஜ்மென்ட் - திண்மக் கழிவகற்றலை பூச்சியம் மட்டத்திற்கு கொண்டு வந்து முகாமை செய்தல்” எனும் செயற்திட்டத்தில் அமைந்த இந்த கள கற்கைள் சிங்கப்பூரில் இடம்பெற்று வருகின்றன.

சிங்கப்பூரில் அமைந்துள்ள திண்மக்கழிவகற்றல் நிலையத்தை நகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு இன்று காத்தான்குடி நகர சபைக்கு சிங்கப்பூர் அரசினால் தொழிநுட்ப மற்றும் அதனோடு இணைந்த அனுசரணைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்குபற்றினர்.

சிங்கப்பூருக்கான இலங்கை துணைத் தூதர் அமீர் அஜ்வத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி நகர முதல்வர் தலைமையில் சிங்கப்பூர் ருவாஸ் சௌத் அவெனியூவில் (Tuas South Avenue) அமைந்துள்ள ருவாஸ் சௌத் இன்சினரேஷன் பிளான்ற் "Tuas South Incineration Plant) எனும் திண்மக்கழிவகற்றல் நிலையத்தையும் காத்தான்குடி நகர சபைத் தலைவர் தலைமையிலான அணியினர் பார்வையிட்டனர்.

Tuas South Incineration Plant இனை வடிவமைத்த  சிங்கப்பூருக்கான தேசிய சுற்றுச் சூழல் நிறுவனத்தின் துணை பணிப்பாளர்  Kwok wai choong மற்றும் சிங்கப்பூருக்கான தேசிய சுற்றுச்சூழல் நிறுவனத்தின் பிரதான மேலாளர் நுகுயென் வா யொன்ங்   ஆகியோரை சந்தித்து அவர்களுடைய திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ முறைகளை தெளிவாக கேட்டறிந்ததோடு காத்தன்குடியில் திண்மக்கழிவகற்றலில் காணப்படுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறப்பட்டது.