மட்டக்களப்பு பகுதியில் நீண்டகாலமாக குளிர்பானங்களில் மயக்க மாத்திரைகளை கலந்து, கொள்ளையடித்து வந்த காத்தான்குடி மற்றும் கொழும்பைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து  தங்க ஆபரணங்களம் மீட்டுள்ளதாக மட்டு தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கடந்த மாதம் 24ஆம் திகதி மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள ஊறணிப்பகுதியில் அதிஷ்ட்ட லாபச்சீட்டு  விற்பனை செய்துவரும் கடை ஓன்றின் உரிமையாளரிடம் மயக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கைச் செயின், மோதிரம் உட்பட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மட்டு தலைமையகப் பொலிஸ் நிலைய சிரேஷ்ட பெறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் துப்புத்துலக்கும் பிரிவு வழங்கிய தகவலலையடுத்து காத்தான்குடி தண்ணீர் தாங்கி வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரை கைது செய்து விசாரணை செய்ததில், கொழும்பு 12 ஆமர் வீதி, மஜித்மாவத்தையைச் சேர்ந்த 67 வயதுடைய நபரும் குறித்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

விசாரணையை அடுத்து மட்டக்களப்பு பொலிஸார் கொழும்பு பொலிஸாரின் உதவியோடு குறித்த நபரையும் கைது செய்து மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து மார்ச் மாதம் 30ஆம்  திகதி மற்றும் ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி ஆகிய தினங்களில்  இரண்டு கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள  நகைக்கடையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.  

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட் இருவரையும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.