(நா.தினுஷா)

தேசிய கொள்கையை உருவாக்கும் நோக்குடன் அரசாங்கம் சிங்கப்பூருடன் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச  வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த போரட்டம் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் அரித அளுத்கே குறிப்பிடுகையில், 

சிங்கப்பூர் நாட்டுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினூடாக எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை. இதனால் இலங்கை பாரிய நட்டத்தையே எதிர்கொள்ளும் அபாயமும் உள்ளது.

அத்துடன் இந்த ஒப்பந்தத்தினூடாக இலங்கையின் அனைத்து நிலப்பரப்பு, சமுத்திரம் மற்றும் ஆகாயம் ஆகியன சிங்கப்பூர் வசமாகிவடும். ஆனால் சிங்கபூர் நிலப்பரப்பில் இலங்கைக்கு 10 வீதம் மாத்திரமே உரித்தாக்கப்படும்.

எனவே நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் இந்த உடன்படிக்கையின் விடயங்களை சுட்டிகாட்டியே இந்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். அத்துடன் எமது இந்த போராட்டம் இன்று காலை 8 மணிமுதல் ஆரம்பிக்கப்படும். இதனால் வைத்திய சேவைக்கு எவ்வித பாதிப்பும் நிகழாது என்றார்.