(ஆர்.யசி)

தேசிய அரசாங்கத்திருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேற வேண்டும். அத்துடன் கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பிரதான பதவிகளிலும் உடனடியாக  மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இறுக்கமான நிபந்தனைகளை சு.க.வின் மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று கூடுகின்றது, இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு குறித்து எம்மிடமும் வினவப்பட்டுள்ளது. இதில் பிரதான இரண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டதாக  கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். 

ஒன்று கட்சியின் பூரணமான மறுசீரமைப்பு இடம்பெற கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சகலராலும் ஏற்றுகொள்ளக்கூடிய பொது செயலாளர் மாற்றங்கள், நிர்வாக குழுக்களின் மாற்றங்கள் என்பன ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உடனடியாக வெளியேற வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளை நாம் மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைப்போம். 

அதற்கும் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுக்க வேண்டும். இல்லையேல் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். 

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து உரிய நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்றார்.