தமிழினப்படுகொலையாம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தலில் கலந்துகொண்டு அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க தார்மீக தமிழின உணர்வுரிமையுடன் அனைவரையும் கலந்து அதில் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழினப்படுகொலையாம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழர் தாயகப்பகுதிகளில் நினைவு கூரப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தின் கலாசார மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நினைவேந்தலைத் தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அரச அறிவியல் துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கத்தினால் 'ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் சவாலும் வழி வரைபடமும்' எனும் கருப்பொருளில் சிறப்பு கருத்துரையும் இடம்பெறவுள்ளது.

எனவே அனைவரையும் தமிழின உணர்வுரிமையுடன் கலந்துகொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.