மாளிகாவத்தை ஹிஜ்ரா மாவத்தை, தொடர்மாடி குடியிருப்பில் இரண்டு வயது குழந்தையொன்று கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலத்தை  அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக நடவடிக்கை எடுத்ததாகவும்  இதன்போதே உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு, மாளிகாவத்தை - ஹிஜ்ரா மாவத்தை, தொடர்மாடி குடியிருப்பில், மர்மமாக உயிரிழந்த குழந்தையொன்றின் சடலத்தை பிரேத பரிசோதனை எதுவும் செய்யாது அடக்கம் செய்ய தயாராவதாக பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி அழைப்பு இலக்கம் ஊடாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அது தொடர்பில்  மாளிகாவத்தை பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த தொடர்மாடி வீட்டுக்கு சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

 பொலிஸார் அவ்வீட்டுக்கு சென்ற போது இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளமையை  தெரிந்துகொண்டனர். இது தொடர்பில் அங்கு பெற்றோர் என முன்னிலையான இருவரிடமும் பொலிஸார் செய்த விசாரணைகளில் குழந்தைக்கு சீனி அதிகரித்ததால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

 இதனையடுத்து  பொலிஸார் குழந்தையின் சடலத்தை பரிசோதித்த போது, இடது காலில் தீ காயம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனால் பொலிஸாருக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்படவே, கொழும்பு மேலதிக நீதிவானுக்கு                ( புதுக்கடை 4 ஆம் இலக்க நீதிவான்) அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதன்போது சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த  நீதிவான் உத்தரவிட்டுள்ள நிலையில்,  நேற்று கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு குழந்தையின் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில் அதனை பிரதான சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா முன்னெடுத்தார். இதன்போது குழந்தை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த சிறுவன் 5 மாத குழந்தையாக இருந்த போது கடிதம் ஒன்றின் ஊடாக தத்தெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.