முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு காரணமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வது  இறுதிவரைக்கும் உறுதியான கொள்கைக்குப் பின்னால் அணிதிரண்ட மக்களின் தியாகங்கள் இலட்சியத்துக்கு செய்யும் பச்சைத்துரோகம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில்  கலந்து கொள்வது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் த. சுரேஷ் இன்று புதன்கிழமை ஊடக அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்தமையினாலேயே போராட்டம் வலுப்பெற்றது. ஜனநாயக ரீதியான போராட்டத்தின் வாயிலாக தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தி வந்த தமிழ் மக்கள் பின்னர் கடந்த மூன்று தசாப்தங்களாக ஆயுத ரீதியான போராட்டத்தின்மூலம் மக்களின் அரசியல் பேனாவை உலகறியச்செய்தனர். 

உண்மையில் மக்களின் அரசியல் பேனாவை வென்றெடுப்பதற்காகவே முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏற்பட்டது தமிழர் ஒரு சிறுபான்மை இனமல்ல நாம் ஒரு தேசிய இனம் எமக்கென தனியான ஒரு மொழி உண்டு எமக்கென தனியான ஒரு கலை கலாச்சார பண்பாடுண்டு எமக்கென தனியான ஒரு வரையறுக்கப்பட்ட வரலாற்று தாயக நிலப்பரப்புண்டு எமக்கென தனியான ஒரு பொருளாதாரக்கட்டமைப்புண்டு. 

ஆனால் பேரினவாதம் அவற்றை தகர்த்தெறிந்து தமது பௌத்த மேலாதிக்கத்தை நிறுவமுற்பட்டு வருகின்றது எமக்கு தேவையான அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையுடன்கூடிய சுயநிர்ணய உரிமை  இதற்காகவே எமது மக்கள் கிட்டத்தட்ட 50,000 மாவீரர்களையும் 300,000 இற்குமேற்பட்ட அப்பாவி மக்களையும் பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழந்தார்கள் .

எமது மக்களின் உறுதியான அரிசியல் நிலைப்பாடே முள்ளிவாய்க்கல் பேரவலமாகும். இறதிவரைக்கும் ஓர் உறுதியான கொள்கைக்குப் பின்னால் அணிதிரண்ட மக்களின் தியாகம் அவர்களின் இலட்சியம் கொச்சைப்படுத்தக்கூடாது. எந்த உன்னத இலட்சியத்திற்காக ஆகுதியானார்களோ அதனை நிறைவேற்றுவதற்காகவே நாம் அனைவரும் பயணிக்க வேண்டும்.

ஆனால் அவர்களின் இழப்பில் வயிறுபிழைக்கும் சில அயோக்கியர்கள் வெறும் பதவிகளுக்கும் பணத்திற்கும் சலுகைகளுக்கும் அரசிற்கு முட்டுகொடுத்துக்கொண்டு போர்க்குற்றம் பொறுப்புக்கூறல் விடயங்களை நீர்த்து போகச்செய்வதற்கு கால அவகாசங்களையும் பெற்றுக்கொடுத்துவிட்டு போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றார்கள். 

புலிகளை பயங்கரவாதிகள் எனவும் பயங்கரவாதத்தை அழித்த அரசிற்கு நன்றிசொன்ன சம்பந்தனும் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது எனக்கூறிய சுமந்திரனும் முள்ளிவாய்க்காலுக்கு ஏன்போக வேண்டும். தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின்  தலைமையின் நிலைப்பாட்டின்படி ஒற்றையாட்சியை ஏற்று ஒரே நாடு ஒரே தேசம் எனும் நோக்கோடு மக்கள் முள்ளிவாய்க்கால் பேரழிவைச் சந்திக்கவில்லை. 

தமிழருக்கென ஒரு வரலாற்று தாயகதேசம் உண்டு என்பதை மிகத்தெளிவாக உலகிற்கு எடுத்துரைக்கவே  முள்ளிவாய்க்கால் நோக்கி சென்றார்கள். எம்மை பொறுத்தமட்டில் முள்ளிவாய்க்கால் பேரளிவுக்கு காரணமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர்தின நிகழ்வுகளில் கலந்துகொள்வது பச்சைத் துரோகம். மட்டக்களப்பில் உள்ள சில தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாங்கள் தான் முதலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்தோம் படுகொலைகளை நினைவுகூர்கின்றோம் இத்தனை தடவைகள் செய்தோம் என பட்டியலிடுகின்றனர்.

நடந்த படுகொலைகளுக்கும் இனவழிப்புக்கும்  ஓர் பல்நாட்டு சர்வதேச விசாரணையினூடாக மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கும் என தாயகமக்களும் சிவில்அமைப்புக்களும் சில அரசியல் பிரமுவர்களும் புலம்பெயர் மக்களும் தமிழ்நாட்டு உறவுகளும் பல தடவைகள் வலியுறுத்தி வந்தபோதும். 

இந்த அரசிற்கு முட்டுக்கொடுத்து போர்க்குறற்வாளிகளை பாதுகாப்பதற்காக சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமல் உள்நாட்டு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் கைநழுவிட்டு இப்போது என்னத்திற்கு இவர்களுக்கு நினைவேந்தல் .

கிழக்கில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கத்தை தவிர வேறு எந்தக்கொம்பனும் குரல்கொடுக்கவில்லை. கிழக்கு தமிழ்மக்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச மயப்படுத்துவதற்கு மாமனிதர் ஜோசப்பரராசசிங்கத்தைவிட எவருக்கும் முள்ளந்தண்டிருக்கவில்லை எனவே இனிமேலாவது இவர்களின் கபடநாடகத்தை மக்கள் புரிந்து முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.