இரணைத்தீவில் மக்கள்  தங்களின் சொந்தக்காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என  மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி  மற்றும்  இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. சுரேஸ் தெரிவித்தார்.

நேற்றையதினம் இரணைத்தீவுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ,  கடற்படைத் தளபதி  ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க தலைமையிலான குழுவினர்  விஜயம் செய்தனர்.  

இவர்களுடன்  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அங்கு  சென்ற மேற்படி குழுவினர்   பொது மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர்கள்  தங்களின் சொந்த நிலத்தில் குடியமர்வதற்கான அறிவிப்பையும் வெளியிட்டனர்.

 எற்கனவே மக்களின் காணிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரணைதீவில் கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்றும்  இவர்கள் நாட்டின் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைதீவு மக்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் எடுத்து தொடர்ந்தும் அங்கிருப்பார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை இரணைதீவு மக்களுக்கான அடிப்படை தேவைகளை  மாவட்டச் செயலகம் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் குறிப்பிட்டார்.