வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அதனைத்தடுத்து நிறுத்துமாறும் வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்ககைதிகளை வவுனியா சிறைச்சாலையில் வைத்திருக்குமாறு கோரியே இன்று காலை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளும் இன்று காலை உணவைப் பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் சிறைச்சாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டால் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் சென்றே கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடவேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.