ஹமீடியாஸ் நிறுவனத்தின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ பரவலானது விபத்தா அல்லது நாசகார நடவடிக்கையா என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்படாத நிலையில், தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய அரச இரசான பகுப்பாய்வாளரின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை - பொருப்பன பகுதியில் உள்ள பிரபல ஆடையகமான ஹமீடியாஸ் நிறுவனத்தின் களஞ்சியசாலையில் பரவிய பாரிய தீ விபத்தை ஒன்பது மணி நேர போராடத்துக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் முற்றாக கட்டுப்படடுக்குள் கொண்டுவரப்பட்டது.

தொழிற்சாலையில் களஞ்சியாலையிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்று திடீரென தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து களஞ்சியசாலையில் பணி புரியும் ஊழியர்கள் அவ்விடத்தை விட்டு விரைவாக வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து தகவல் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு  தெஹிவளை - கல்கிசை மாநகர  தீயணைப்பு படையினரும் அதற்கு மேலதிகமாக கொழும்பு, கோட்டே, மொரட்டுவ மற்றும் இரத்மலானை விமான நிலைய தீயணைப்பு படையினரும்  விமானப்படையினர் உள்ளிட்ட முப்படையினரும் பொலிஸாரும்   ஸ்தலத்துக்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந் நிலையிலேயே சனிக்கிழமை இரவு 10.30 மணியாகும் போது தீ  பரவலை முற்றாக கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எவ்வாறாயினும் இந்த தீ பரவலானது விபத்தா அல்லது நாசகார நடவடிக்கையா என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்படாத நிலையில், தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய அரச இரசான பகுப்பாய்வாளரின் உதவியை பொலிஸார் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.