இலங்கை மின்சார சபையும் ஸ்ரீலங்கன் எயார் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இக் காரணத்தினால் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை போக்கும் நோக்கில் மாற்று வழியை கையாண்டு வருமானம் ஈட்டவே பெற்றோலின் விலையை அதிகரித்தோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை காலி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக காரியாலத்திற்கான புதிய கட்டடங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக சந்தையில் பெற்றோலின் விலை 41 டொலரினால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் நட்டத்தை தொடர்ந்தும் பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் சுமக்க முடியாது.

அத்துடன் சவுதி அரேபியா எரிப்பொருளின் விலையை 80 டொலராக அதிகரிக்க திட்டமிட்டுள்ள போதிலும் அதற்கு ஏனைய நாடுகள் எதிர்ப்பு வெளியிடுகின்றன. 

எவ்வாறாயினும் இன்னும் ஒரு வருட காலப்பகுதிக்குள் உலக சந்தையில் எரிப்பொருளின் விலை குறைவடையும் என நம்புகின்றோம். அப்படி குறையும் போது அந்த சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு நானும் ஜனாதிபதியும்  இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.

2016 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்தது. இதன்படி 41 டொலரினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்பிரகாரம் உலக சந்தையின் விலையேற்றத்திற்கு ஏற்ப பெற்றோலிய கூட்டுதாபனம் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெயின் விலைகளை கடந்த வியாழக்கிழமை முதல் அதிகரித்தது என்றார்.