அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் இம்முறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதுடன், பலர் தமது தொழிலைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிகளவான இயந்திரப் படகுகள் மற்றும் பாரிய அளவிலான மீன்பிடி என்பவற்றால் செல்வாக்குப் பெற்றிருந்த கல்முனைப் பிரதேசம் தற்பொழுது வெளியிடங்களிலிருந்து மீன்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் இடமாக மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, நீண்டகாலமாக இத்தொழிலில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் தற்பொழுது மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதில் அதிக ஆர்வங் காட்டுவதாக இம்மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை இப்பிரதேசங்களில் போதிய மீன்பிடியின்மை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் மிகவும் பெறுமதியான தமது ஆழ்கடல் இயந்திரப் படகுகளை பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் தாம் பெரும்சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இதற்காக பெருந்தொகையான செலவுகளைச் செய்ய வேண்டியிருப்பதாகவும் ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.