(ஆர்.யசி)

அரசாங்கம் தனது செலவுகளை குறைத்துக் கொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்காது வரிகளை அதிகரித்து மக்களை நசுக்கும் செயற்பாடுகளையே  முன்னெடுத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக தெரிவித்தார்.

பாரளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  குடியியல் வான் செலவு ( திருத்த ) சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில். 

நாட்டில் தற்போது எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது இதற்கு அரசாங்கம், சர்வதேச எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ரூபாவின் விலை வீழ்ச்சி என்ற காரணிகளை கூறி அதனை சாட்டாக வைத்து வரிகளை குறைக்காது விலையினை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. விலை உயர்வு ஏற்படுகின்றது என்றால் வரிகளை குறைத்து மக்களுக்கு ஏற்றால் போல் வழங்க முடியும். அவ்வாறான  சந்தர்ப்பங்களில் ஒரு சிறிய தொகை அதிகரிக்கப்படுவதை ஏற்றுகொள்ள முடியும். 

ஆனால் அரசாங்கம் தமது வரிகளை குறைக்கவும் தமது செலவுகளை குறைக்க அரசாங்கம் தயாராக இல்லை. அத்துடன் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவற்றை குறைக்கவும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது மக்கள் மீதே வரிச் சுமைகளை திணித்து மக்களை நசுக்குகின்றது. 

மேலும் ஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் அமைப்பிற்கு முரணாகவே செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என கூற முடியாது என்றார்.