இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலை மே 31 ஆம் திகதி நடத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தல் மே 19 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த உத்தரவை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கியுள்ளது.

தேர்தலிற்கான குழுவை அமைப்பதற்கான நடைமுறைகளை  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மீறியதை தொடர்து விளையாட்டமைச்சு தலையிட்டு  19 ஆம் திகதி இடம்பெறவிருந்த தேர்தலை பிற்போட்டிருந்தது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் விளையாட்டு சட்டங்களிற்கு முரணாக தேர்தல் குழு  ஏற்படுத்தப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடனே தாங்கள் செயற்பட்டதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சையின் பின்னணியிலேயே 31 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தவேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.