(எம்.சி.நஜிமுதீன்)

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது  வேட்பாளரை களமிறக்கப்போவதில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சி தனது அபேட்சகர் ஒருரையே களமிறக்கவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்து கூட்டரசாங்கம் அமைத்தோம் இவ்வாறு அமைக்கப்பட்ட கூட்டரசாங்கத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் அரசியல் ரீதியாக பல்வேறு நட்டங்களை எதிர்‍கொண்ட போதிலும் நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தோம்.

இரு கட்சிகளுக்குமிடையில் பல விடங்களில் உடன்பாடில்லாத போதும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டி வருகிறோம். அதனால்தான் நாட்டுக்கு சாதகமான பல்வேறு திட்டங்களை முன்வைக்க முடிந்தது.

மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த சட்டமூலத்தை ஆராய்ந்த பின்னர் கட்சியின் செயற்குழுவினால் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.

அத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பொது  வேட்பாளரை களமிறக்கப்போவதில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சி தனது அபேட்சகரையே களமிறக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.