(டீ. ரஸ்மிளா)

சைட்டம் மருத்துவ கல்லூரி விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதமே சைட்டம் பிரச்சினை தற்போதும் தொடர்ந்து செல்வதற்கான காரணம் ஆகும். எனவே அவற்றை உரிய முறையில் விரைவாக செயற்படுத்த உயர் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த இளைஞர் முன்னணித் தலைவர் சாந்த பண்டார , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அவரது  அரசாங்கமே   அந் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான  சகல உதவிகளையும் வழங்கியது. ஆனால்  இப்போது  அதனை  மூடிவிடுமாறு வற்புறுத்தி நாள்தோறும் போராட்டம் நடத்துகின்றனர் எனவும் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர்  இதனை தெரிவித்தார்.

அங்கு  அவர் மேலும் தெரிவிக்கையில், 

சைட்டம் தொடர்பில் ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஏற்பட்ட காலதாமதமே தற்போதும் சைட்டம் பிரச்சினை தொடர்வதற்கான காரணம் ஆகும்.  சரியான செயற்பாடுகளை சரியான நேரத்தில் முன்னெடுக்கப்படாவிட்டால்,  இவ்வாறான ஆர்ப்பாட்டம்  போன்ற காரணிகளினால் மக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்படுவதுடன்  நாட்டின் பொருளாதாரமும்  பாதிக்கப்படும்.

எவ்வாறிருப்பினும்  நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் போன்றனவற்றை செய்து இதற்கான தீர்வு கிடைக்காது எனவும்,  ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவற்றை மிகவும் துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு உயர்கல்வி அமைச்சியிடம் கேட்டுக்கொள்கின்றேன். 

இதேவேளை, எமக்கிருக்கும் பொருளாதார நெருக்கடி,  சமூகப் பிரச்சினை,   அரசியல் பிரச்சினை  அனைத்தையும் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து   முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார்.