ஒரு வருட காலத்திற்குள் காத்தான்குடி நகரில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டு திண்மக் கழிவுகளால் பிரச்சினைகளே இல்லை என்ற பூச்சிய நிலைக்கு வந்துவிடும் என்று தான் திடமாக நம்புவதாக காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.

நகர சபைத் தலைவராக பொறுப்பேற்ற அடுத்த சில மணிநேரங்களிலிருந்தே அவசரமும் அவசியமுமாக செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகளில் திண்மக் கழிவகற்றல் என்பது தனது பதவிக்கால நிகழ்ச்சி நிரலில் முதலாவது இடத்தில் சிவப்பு எச்சரிக்கை சமிக்ஞையுடன் இருப்தாக அவர் மேலும் தெரிவித்தார்.

“ஷீரோ வேஸ்ற் மனேஜ்மென்ற் - திண்மக் கழிவகற்றலை பூச்சியம் மட்டத்திற்கு கொண்டு வந்து முகாமை செய்தல்” எனும் செயற்திட்டத்தில் அமைந்த 3 கள கற்கைப் பயணமொன்றுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை சிங்கப்பூருக்கு மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் திண்மக் கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாக காத்தான்குடி நகர சபையால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் குறித்துக் கருத்து வெளியிட்டார்.

 சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுசரணையுடன் சூழல் சுற்றாடல் அமைச்சு மற்றும் அங்குள்ள உள்ளுராட்சி மன்றங்கள் இணைந்து திண்மக் கழிவகற்றலை முகாமைத்துவம் செய்வதில் வினைத்திறனுடன் செயலாற்றி உலகுக்கு முன்னுதாரணம் மிக்கதாய்ச் செயற்படுத்திக் காட்டியுள்ளன.

அந்த செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் படிப்பினைகளுடன் நடைமுறைச் சாத்தியமானவற்றை காத்தான்குடி நகர சபைப்பிரிவில் அமுல்படுத்தி முழு இலங்கைக்கும்  முன்மாதிரியான திண்மக் கழிவு முகாமைத்துவத்தைச் செயற்படுத்திக் காட்டுவதற்கும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

இதற்கு நகரசபை நிருவாகம் மட்டும் அர்ப்பணிப்புச் செய்தால் போதாது ஒட்டு மொத்த பிரதேச மக்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அரசாங்கமும் அனுசரணை வழங்க வேண்டும்.” என்றார்.

சிங்கப்பூரின் பூச்சியம் நிலை திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தின் நடைமுறைச் சாத்தியமான விளைதிறன்களை அறிந்து கொள்தற்காக காத்தான்குடி நகர சபைத் தலைவருடன் செல்லும் குழுவில் நகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ. அமீரலி, எம்.ஐ.எம். ஜவாஹிர், ஏ.எம். பௌமி மற்றும் காத்தான்குடி நகரசபையின் திண்மக் கழிவுமகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அலுவலர் எம். பஸ்மி  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.