(நெவில் அன்தனி)

இளம் பராயத்தில் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு சாதிப்பது இலகுவானது. ஆனால், வயது செல்லசெல்ல போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெறுவது என்பது சிரமமானது. எனினும் குடும்ப மாதர்களான பின்னரும் விடா முயற்சியுடன் ஹொக்கி விளையாட்டில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளைப் பாராட்டுவதாக விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்பெய்னின் பார்சிலோனாவில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான எக்கின் மாஸ்டர்ஸ் உலகக் கிண்ண ஹொக்கி போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி அணியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தும் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்துகொண்டு அமைச்சர் பேசினார்.

விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர்கூடத்தில் இது தொடர்பான ஊடகவியாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.

ஸ்பெய்ன் செல்லவுள்ள இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி அணிக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, இந்த நிகழ்வில் பேசிய நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி சங்கத்தின் போஷகருமான ரவூப் ஹக்கீம் பேசுகையில், ‘‘ஏனைய நாடுகளில் போன்று இலங்கையில் ஹொக்கி பயிற்சியங்கள் இல்லை. அத்துடன் மகளிர் பாடசாலைகளுக்கு ஹொக்கி பயிற்றுநர்களை நியமிப்பதிலும் சிக்கல் நிலவுகின்றது. மேலும் தேசிய ஹொக்கி சங்கத்தில் சர்ச்சை நிலவுகின்ற நிலையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி சங்கத்தை சர்வதேச அமைப்பில் பதிவு செய்ய உதவியமை பாராட்டத்தக்கது’’ என்றார்.

இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி அணியினர் அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் ஹொக்கி போட்டியில் அரை இறுதிவரை முன்னேறியிருந்தனர். இந்நிலையில் பார்சிலோனாவில் தமது குழுவில் இடம்பெறும் அணிகளை வெற்றிகொண்டு அரை இறுதிவரை முன்னேற முடியும் என அணித் தலைவி சோபிதா மெண்டிஸ் தெரிவித்தார்.

‘‘இலங்கை தேசிய மகளிர் அணியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளே மாஸ்டர்ஸ் மகளிர் அணியிலும் இடம்பெறுகின்றனர். சங்கத்திலிருந்து அங்கத்துவ நிதியைக் கொண்டும் தனிப்பட்டவர்களின் நிதியைக்கொண்டுமே நாங்கள் மலேசியா சென்று அரை இறுதிவரை முன்னேறினோம். பார்சிலோனாவிலும் எம்மால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அரை இறுதிவரை முன்னேற முடியும் என நம்புகின்றோம். மேலும் அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம் ஆகியோர் வழங்கிவரும் ஆசோலனைகளும் உதவிகளும் எமக்கு தெம்பூட்டுவதாக அமைகின்றது’’ என இலங்கை ஹொக்கி அணியின் முன்னாள் தலைவியாகவும் விளையாடிய சோபிதா மெண்டிஸ் மேலும் கூறினார்.

பார்சிலோனாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து, கானா, ஸ்பெய்ன், இலங்கை ஆகிய நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றவுள்ளன.