(இரோஷா வேலு) 

பொது மக்களின் தகவலறியும் உரிமையினை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்டின் இரண்டாவது நாள் கலந்துரையாடல்கள் கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை அமுல்படுத்தி ஒரு வருட கால நிறைவை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் ஏழு நாடுகளை கொண்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது இரண்டு நாள் நடைபெற்ற இம்மாநாட்டின் முதல் நாளில் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான நடைமுறைத் தன்மைகளும் அவ்வுரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் மற்றும் அவற்றினால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தன. 

இதன்படி நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் கலந்துரையாடலின் போது, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களை அந்நாட்டு பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டிருந்தனர். 

மேலும் நேற்றைய மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தின் கீழ் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகளும் அதனை நடைமுறைப்படுத்தும் செயல்வடிவம் குறித்தும் பிற நாடுகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

இதன்போது எதிர்வரும் காலங்களில் ஏனைய நாடுகளின் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை முன்னுதாரணங்களாக கொண்டு இலங்கையில் இச்சட்டத்தை வெற்றிக்காண செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. 

இதற்கிடையில், இலங்கை ஊடகவியலாளர்களினால் தகவலறியும் உரிமைச் சட்டமானது, தரம் ஆறு முதல் உயர்கல்வி வரையிலான மாணவர்களின் கல்வித் திட்டங்களுக்குள்வாங்கப்பட வேண்டும் என்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை தாம் கவனத்தில் எடுப்பதாகவும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

அவற்றுடன் தரவுகளை பெற்றுக் கொள்ளும் போது கோரிக்கையாளர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்தும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. 

இதுவரையில் இலங்கையானது தகவல்களை பெற்றுக் கொடுப்பதற்கு வேண்டிய பக்கச்சார் திட்டங்களே அவதானத்தில் கொள்ளப்பட்டிருந்ததாகவும் இவ்வருடம் முதல் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு பொது மக்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட வேண்டி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இத்தீர்மானத்திற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது என்பதோடு, ஊடகவியலாளர்கள் இதற்கு முன்னுதாரணமாக திகல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.