(எம்.எப்.எம்.பஸீர்)

2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கை பணிகளை இலங்கையில் மேற்கொண்ட உலகின் மிகப் பெரிய யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான வைத்தியசாலை கப்பலானது,  தனது பணிகளை நிறைவு செய்துகொண்டு நாளை புதன்கிழமை  திருமலை துறைமுகத்திலிருந்து விடைபெறவுள்ளது. 

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி திருணோமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலில்  கடற்படை வீரர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவினர், இலங்கை கடற்படையுடன் இணைந்து சுமார் 13 நாட்கள் திருமலையின் பல பகுதிகளிலும் பல்வேறு மனிதாபிமான உதவிகள் , அனர்த்த பாதிப்பு நிலைமைகளைக் கையாளும் விதம், கலை கலாசார பறிமாற்றங்கள் தொடர்பான செயற்றிட்டங்களை முன்னெடுத்தனர்.

 இந் நிலையிலேயே பசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கையின் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை நேற்றுடன்  நிறைவுசெய்துகொண்ட யூ.எஸ்.என்.எஸ். மேர்சி கப்பலும் அதில் வருகை தந்த குழுவினரும்  நாளை இலங்கையிலிருந்து விடைபெற்று வியட்நாமிலும் அங்கிருந்து ஜப்பானுக்கும் பயணித்து அங்கும் தமது பங்காண்மை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.