(இராஜதுரை ஹஷான்)

மின்சார சபை பொறியியலாளர்கள்  தயாரித்த சூத்திரத்தை எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடின் பொறியியலாளர்கள் சங்கத்தின் மேற்கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட வேலை, வேலை நிறுத்தப் போராட்டமாக மாற்றமடையலாம் என மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,

மின்சார சபை பொறியியலார்கள் தயாரித்த குறைந்த செலவில் நீண்டகால மின்சார சூத்திரத்திற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்காமையின் காரணமாக இன்று முதல் வரையறுக்கப்பட்ட கடமையில் மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டனர்.  

போராட்டம், மின்சாரம், பொறியியலாளர் சங்கம், மின்சார சபை

மின்சார சபை பொறியியலாளர்கள்  தயாரித்த இந்த சூத்திரத்தை எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடின் பொறியியலாளர்கள் சங்கத்தின் மேற்கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட வேலை, வேலை நிறுத்தப் போராட்டமாக மாற்றமடையலாம். 

குறைந்த விலை சூத்திரங்களை பெற்றுத்தரக்கூடிய அனல் மின் நிலையங்களை உருவாக்குவதுடன் தற்போது காணப்படுகின்ற நுரைச்சோலை அனல்மின்னிலையம் தவிர ஏனைய அனல் மின்னிலையங்களை மீள்திருத்தம் செய்வது தற்போது அதிகரித்துள்ள மின்சார பாவனையின் கேள்விகளுக்கு தீர்வாக அமையும்.

20 வருட நீண்ட கால தேவையினை கருத்திற் கொண்டு நாங்கள் தயாரித்த   திட்டங்களை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரித்துள்ளது. அரசாங்கத்திடம் இவ்விடயம் தொடர்பில் கடந்த 3 வருட காலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை காலமும் எவவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேவேளை எமது இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு  மின்சார சபையின்  பணியாளர்கள் சங்கம் முன்வந்துள்ளனர் என்றார்.