ஈரானுடான அணுவாயுத உடன்படிக்கை குறித்த தனது இறுதிமுடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று வெளியிடவுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில் ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்தே டிரம்ப் இன்று அறிவிக்கவுள்ளார்.

2015ம் ஆண்டு  செய்துகொள்ளப்பட்ட குறிப்பிட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகவேண்டும் என டிரம்ப் தேர்தல் பிரச்சார காலத்திலிருந்து கருத்து தெரிவித்து வந்துள்ள நிலையிலேயே இன்று தனது முடிவை அறிவிக்கவுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஈரானுடனான உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்து எச்சரிக்கை செய்துள்ளனர்.

டிரம்பின் இந்த நடவடிக்கை காரணமாக ஈரான் அணுவாயுதங்களை உற்பத்தி செய்வதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வீணாகிவிடும் என ஐரோப்பிய ஓன்றிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

டிரம்பின் இந்த நடவடிக்கை காரணமாக மத்திய கிழக்கு மேலும் பதட்டமானதாக மாறக்கூடும், குறிப்பாக சிரியாவில் நிலைமை மோசமடையலாம், ஈரான் இஸ்ரேல் மோதலுக்கான வாய்ப்புள்ளது என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

டிரம்பின் இந்த நடவடிக்கை ஒரு வரலாற்று தவறாக அமையும் என ஈரான் தெரிவித்துள்ளது.