நல்லாட்சி அரசாங்கத்தினால் மலைய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினேலேயே அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என மலைய மக்கள் முன்னணி உறுப்பினர் டாக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார். 

கூட்டு எதிர்க்கட்சியின் தொழிலாளர் தினக்கூட்டம் நேற்று காலி சமனல மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

122 வருடங்ளாக தொழிலாளர் தினம் மே மாதம் முதலாம் திகதியே கொண்டடப்பட்டு வந்தது. ஆனால் இவ்வருடம் அது மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் சகல விடயங்களிலும் மாற்றம் ஏற்படுத்த முனைகிறது. ஆனால் அதன் மூலம் பாதகமே ஏற்படுகிறது. இவ்வாறான மாற்றங்கள் நாட்டை எங்கு கொண்டு சென்று விடுமோ தெரியாது.

மேலும் இருநூறு வருடகால வரலாற்றைக்கொண்ட மலைய மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. காலம் காலமாக அம்மக்கள் இழிபேச்சுகளுக்கு உட்பட்டு வருகின்றனர். ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அம்மக்கைள ஏமாற்றியே வருகிறது.

இனியும் அந்நிலையைத் தொடர விடமுடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே அம்மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்க முடியும். ஆகவே மலைய மக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.