(எம். நியூட்டன்)

யாழ். மாவட்டத்திற்கு சிங்கள அலுவலர்களை நியமியுங்கள் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு தமிழ் அலுவலர்ளை மாத்திரம் நியமிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் அரச திணைக்களங்களில் பல அலுவலர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனைவிட அரசாங்கம் தனக்கு ஏற்றமாதிரி தங்களுடைய ஆட்களுக்கு வேலை வழங்க வேண்டும் என  தமக்குரிய உரித்துக்களை செய்து வருகின்றது. 

குறிப்பாக அரசாங்கத்துக்குரிய நிரல், வடமாகாணத்துக்குரிய நிரல், அரசாங்கமும் மாகாணமும் இணைந்து செய்யவேண்டிய நிரல் என 3 விதம் உள்ளது. அரசாங்கத்துக்கு உரிய நிரலில் சிலரை இங்கு அனுப்புகிறார்கள். இவ்வாறு அனுப்புபவர்களுக்கு இடங்கள் அலுவலகங்கள் இங்குள்ள அதிகாரிகளை தெரியாது. அவ்வாறு இருந்தும் அனுப்புகிறார்கள். 

இந்த விடயமானது பல சிக்கல்களை உருவாக்கும். அரசாங்கம் இத்தகைய விடயங்களை கல ந்துரையாடி முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவடங்களில் அரசாங்க அதிபர்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். தமிழ் இடங்களில் சிங்களவர்களையும் சிங்கள இடங்களில் தமிழர்களையும் நியமிப்பதாகக் கூறி ஆளுநர்கள் விடயத்தில் இத்தகைய நிலையே உருவாகியுள்ளது. 

என்னைப் பொறுத்தவரை வடமாகாணத்திற்கு சிங்கள அலுவலர்களை நியமிப்பதாயின் யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்க வேண்டும். அல்லது கிளிநொச்சிக்கு அனுப்ப வேண்டும். ஏன் முல்லைத்தீவு, வவுனியா, மன்னாருக்கு அனுப்புகிறார்கள். இவர்கள் அங்கு இருக்கும்போது தான் பலவிதமான தெற்கு குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் பிரதேசங்களில் சிங்கள அலுவலர்களும் சிங்கள இடங்களில் தமிழ் அலுவலர்களைுயும் நியமிப்பதாக இருந்தால் அந்த சிங்கள அலுவலர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் இருந்து வேலைகளைச் செய்யட்டும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தமிழ் அலுவலர்களை அந்த வேலைகளைச் செய்யட்டும் என்றார்.