காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

 காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா தாக்கல் செய்த வழக்கில் கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த உயர்நீதிமன்றம், தீர்ப்பை செயற்படுத்த 6 வாரங்களுக்குள் திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், கால அவகாசம் முடியும் தருவாயில், 'ஸ்கீம்' என்று குறிப்பிட்டிருப்பது பற்றி மத்திய அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.

 இதனால் தீர்ப்பை அமுல்படுத்துவது தள்ளிப்போனது. இதையடுத்து தீர்ப்பை அமுல்படுத்தத் தவறிய மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை மே மாதம் மூன்றாம் திகதி தாக்கல் செய்யுமாறு‌ மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவில்லை. எனவே, வரைவு அறிக்கை நிலை என்ன என்பது பற்றிய பிரமாண பத்திரத்தை மத்திய அரசு மே எட்டாம் திகதியான இன்று, தாக்கல் செய்ய அதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், மத்திய அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண பத்திரத்தை பரிசீலித்து இன்று உயர்நீதிமன்றம் தனது விசாரணையின்போது உத்தரவு பிறப்பிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.