(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலை தொடர்பான சூத்திரத்தினை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேநேரம் அச் சூத்திரம் எதிர்வரும் அமைச்சரவை அமர்வில் சர்ப்பிக்கப்படாது என நிதியமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

எரிபொருள் விலை தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனினும் இவ்விடயம் தொடர்பில் நீண்ட கால கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டதன் பின்னர் இவ்விலை சூத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

கடந்த மார்ச்  மாதம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோலிய விலையை அதிகரித்திருந்ததன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தினை எதிர்கொண்டதாக நிதி அமைச்சு தெரிவித்திருந்தது. மேலும்   இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  நாளொன்றுக்கு 38 மில்லியன் ரூபா நட்டத்தினை சந்திப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சினால் தெரிவிக்கப்பட்டிருந்த அதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.  

அதற்கமைய எரிபொருட்களின் நியாயமான விலை அதிகரிப்பினை கருத்திற் கொண்டு நிதி அமைச்சு சூத்திரமொன்றை அமைத்து எதிர்வரும் இரு வாரங்களில்  அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விலை உயர்வு சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.